மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள அரியவன் படத்தின் திரைவிமர்சனம்!

நடிகர் தனுசை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் மற்றும் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் இஷாவோன் நடித்துள்ள அரியவன் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  மேலும் இந்த படத்தில் டேனியல் பாலாஜி, பிரனாலி கோகரே, காமெடி நடிகர் சத்யன், சூப்பர்ஹூட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  அரியவன் படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

இளம் பெண்களை திட்டமிட்டு காதலித்து அவர்களை ஏமாற்றி ஆபாசமான முறையில் வீடியோக்கள் எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறது ஒரு கும்பல், அந்த கும்பலுக்கு தலைவனாக டேனியல் பாலாஜி உள்ளார்.  கதாநாயகி பிரனாலி கோகரேவின் தோழியும் அந்த கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். பிறகு கதாநாயகன் இஷாவோன் அந்த பெண்ணை மட்டும் இன்றி அந்த கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ள அனைத்து பெண்களையும் அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்.  இதனால் கோபமடையும் டேனியல் பாலாஜி ஹீரோவை பழிவாங்க எண்ணுகிறார், இறுதியில் என்ன ஆனது என்பது தான் அறியவன் படத்தின் கதை.

தமிழில் சமீப காலமாக இளம் பெண்களை ஏமாற்றி அவர்களை மிரட்டும் கும்பலை பற்றிய கதை பல வெளியாகி வருகின்றன.  இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் படமும் கிட்டத்தட்ட இதே கதை அம்சத்துடன் வெளியாகி இருந்தது, அந்த வகையில் அரியவன் படமும் வெளியாகி உள்ளது. கதாநாயகன் இஷாவோன் மற்றும் கதாநாயகி பிரனாலி கோகரே இருவரும் புதுமுகம் என்பதால் நடிப்பதற்கு சற்று சிரமப்படுகின்றனர், இருப்பினும் பெரிதாக உறுத்தாமல் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் நடித்துள்ளனர். 

ariyavan

டேனியல் பாலாஜிக்கு வில்லனாக இப்படம் ஒரு புதிய பரிமாற்றத்தை கொடுத்துள்ளது, குறிப்பாக கிளைமாக்ஸ்-ல் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்திருந்தார். ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபட வில்லை என்றாலும் பின்னணி இசை சிறப்பாக செய்துள்ளார். விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக இருந்தது.  காட்சிகளாக எதுவும் புதிதாக இல்லை என்றாலும் திரைக்கதையாக பார்ப்பதற்கு படம் நன்றாக உள்ளது, முக்கியமாக தற்போது இளம் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் முக்கியமான பிரச்சினை பற்றி அரியவன் படம் பேசி உள்ளது.  பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும், ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி வெளியில் வருவது போன்ற முக்கியமான காரணிகளை படம் பேசுகிறது.  காட்சிகளாக திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும், மற்றபடி இளம்பெண்கள் மற்றும் குடும்பங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அறியவன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.