Assembly Election Results: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி (BJP) நாகாலாந்தில் மகத்தான வெற்றியை நோக்கி செல்கிறது மற்றும் திரிபுராவில் பாஜக முன்னணியில் உள்ளது. மேகாலயா மாநிலத்தை பொறுத்த வரை தேசிய மக்கள் கட்சிக்கு (என்பிபி) அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இடதுசாரி கோட்டையான திரிபுரா மாநிலத்தில் 2018-ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இந்தமுறை பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றாலும், தற்போதைய நிலவரப்படி, யாருக்கு அதிக பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் உறுதியாகக் கூறமுடியாது.
திரிபுரா:
கடந்த பிப்ரவரி 16-ம் தேதியன்று திரிபுரா மாநிலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். இந்தமுறை பாஜக கூட்டணி ஆட்சியைவீழ்த்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டு ஒன்றாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. அதேபோல் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் கண்டது. தற்போதைய கணக்குப்படி, திரிபுராவில் பாஜக கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல திரிபுராவில் சிபிஎம் – காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
நாகாலாந்து:
கடந்த தேர்தலில் பா.ஜ.க-வும், தேசிய மக்கள் கட்சியும் இணைந்து சுயேச்சைகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தன. அதேபோல இந்த முறையும் பா.ஜ.க-வும், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் இணைந்தே தேர்தலை எதிர்கொண்டன. மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் தனித்துக் களம் கண்டது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டயின்றி வெற்றி பெற்றார். இதையடுத்து, 59 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 31 இடங்கள் தேவை. தற்போதைய நிலவரப்படி, நாகாலாந்தில் பாஜக கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில் NPF கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. என்சிபி 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
மேகாலயா:
60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மேகாலயா சட்டசபைக்கு கடந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதில் 81.57 சதவீத வாக்குகள் பதிவாகின. காலை எட்டு மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் சில, மேகாலயாவில் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறுகின்றன. மேகாலயாவில் கான்ராட் சங்மா தலைமையிலான NPP கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தனர். தற்போதைய முன்னணி நிலவரமும் அதை பிரதிபலிப்பதாகவே உள்ளது. முதலமைச்சர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி இதுவரை மொத்தம் 59 இடங்களில் 17 இல் முன்னிலை வகிக்கிறது.