திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த ராஜா கண்ணு என்பவரும் அவரது உறவினர் கருப்பையா என்பவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலம் அகஸ்தியர்புரம் தென்மலை ரோட்டில் உள்ள அமைந்துள்ளது.
அதே பகுதியில் காரைக்குடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனபால் என்பவருக்கு சொந்தமான நிலமும் அமைந்துள்ளது. இந்த நிலையில் ராஜாகண்ணு, கருப்பையா மற்றும் தனபால் ஆகியோருக்கு இடையே நிலம் தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று தனபால் மற்றும் ராஜாகண்ணு, கருப்பையா ஆகியோர் இடையே மீண்டும் நிலம் தொடர்பான பிரச்சனை எழுந்ததை அடுத்து வாக்குவாதமாக மாறி ஒரு கட்டத்தில் தனபால் தான் வைத்திருந்த இரட்டைக்குழல் நாட்டுத் துப்பாக்கியை கொண்டு ராஜ கண்ணு மற்றும் கருப்பையாவை சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கருப்பையாவின் வயிற்றிலும், ராஜாகண்ணுவின் கையிலும் குண்டு பாய்ந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு கூடியதால் சம்பவ இடத்திலிருந்து தனபால் தப்பிச் சென்றார்.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர் தனபாலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.