திருமலை:தெலங்கானா கவர்னருக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது.தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசைக்கும், தெலங்கானா அரசுக்கும் இடையே நிலவி வரும் தகராறு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. மாநில அரசு சட்டப்பேரவையிலும், சட்ட மேலவையிலும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.மாநில அரசு சார்பில் அரசு தலைமை செயலர் மனு தாக்கல் செய்தார்.கவர்னரின் செயலர், மத்திய சட்டத்துறை செயலர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாநில அரசு அனுப்பிய 10 மசோதாக்களையும் கவர்னர் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இரு அவைகளிலும் நிறைவேற்றிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது நியாயமில்லை என்றும் கவர்னருக்கு உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.