மதுரை: தமிழ்நாட்டில் உள்ள 1,578 காவல் நிலையங்களில் சுமார் ஒன்றரை ஆண்டு வரை சேமிக்கும் திறன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என உள்துறை சிறப்புச் செயலர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, மேலமாசி வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர், கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக, திடீர் நகர் போலீசில் பதிவான 4 வழக்குகளை, சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திடீர் நகர் காவல் நிலையத்தின் 10.8.2022 முதல் 15.8.2022 வரை பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையின்போது சம்பந்தப்பட்ட தேதியில் சிசிடிவி பதிவுகள் இல்லை. 15 நாள் மட்டுமே சேமிக்க முடியும் என போலீசார் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து அறிக்கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உள்துறை சிறப்புச் செயலர் ஆனந்தகுமார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு முழுதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட அதிகளவில் ேசமிப்புத்திறன் கொண்ட சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக ரூ.38.35 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 1,578 காவல் நிலையங்களில் ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை பதிவுகளை சேமிக்கும் திறன் ெகாண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததும் 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து ெகாண்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.