மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கடந்த டிசம்பர் மாதம் 10 மாடுகள் கொண்ட பிரம்மாண்டமான சூப்பர் சரவணா ஸ்டோர் திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் முழுமையாக கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் அளவில் சூப்பர் சரவணா ஸ்டோரின் 10வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சரவணா ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாங்கும் உணவுப் பொருட்களை உண்பதற்காக 10வது மாடியில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரவணா ஸ்டோரின் பத்தாவது மாடியில் அமைந்துள்ள சமையலறை பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் சரவணா ஸ்டோர் ஊழியர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை சரவணா ஸ்டோர் அருகே மூன்று 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மீட்கப்பட்ட சரவணா ஸ்டோர் ஊழியர்கள் சிலர் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பெண் மற்றும் 2 ஆண் ஊழியர்கள் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.