“தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் போலியானவை!" – தேஜஸ்வி யாதவ்

திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெறுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி `பகீர்’ கிளப்பின. அதன் பின்னர் உடனடியாக காவல்துறை தரப்பிலிருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கடந்த சில நாள்களாகவே, வடமாநிலத் தொழிலாளர்களை தமிழ்நாட்டு இளைஞர்கள் தாக்குவதுபோன்ற வீடியோக்கள் மீண்டும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

நிதிஷ் குமார்

அதைத் தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “தமிழ்நாட்டில் வேலைபார்க்கும் பீகார் தொழிலாளர்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து, செய்தித்தாள்கள் வாயிலாக தகவலறிந்தேன். எனவே, தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேசி, அங்கு வசிக்கும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, பீகார் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என நேற்று ட்வீட் செய்திருந்தார்.

அதன் பின்னர் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு , நேற்றே அதற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை, யாரோ சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கின்றனர். இரண்டு விடியோக்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டுமே போலி வீடியோக்கள்.

அதில் வரும் இரண்டு சம்பவங்களும், திருப்பூர், கோயம்புத்தூரில் நடந்தவை. இந்த இரண்டு நிகழ்வுகளும், தமிழ்நாடு மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் அல்ல. ஒரு சம்பவம், இரண்டு பீகார் புலம்பெயர் தொழிலாளர் கும்பல்களுக்கிடையிலானது. மற்றொன்று கோயம்புத்தூரில் உள்ளூர்வாசிகளுக்கிடையே நடந்த மோதல். இதுவே உண்மை. மக்கள் இங்கு அமைதியாக வாழ்கின்றனர். சட்டம் ஒழுங்கு கட்டுக்கோப்பாகவும், கடுமையாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது” என்று சைலேந்திர பாபு கூறியிருந்தார்.

தேஜஸ்வி யாதவ்

இந்த நிலையில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சைலேந்திர பாபுவின் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, “பா.ஜ.க, அதன் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க ஊடகங்கள் ஆகியவற்றுக்கும், உண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களின் பொய்கள் மீண்டும் வெளிப்பட்டுவிட்டன. பொய், குழப்பம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை பரப்புவதே பா.ஜ.க-வின் தொழில். தேசப்பற்றுள்ள எவரும் சமூகத்தில் வெறுப்பையும், குழப்பத்தையும் பரப்பக் கூடாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.