வாஷிங்டன்-‘சீனா மிகவும் பலம் வாய்ந்த மற்றும் ஒழுக்கமான எதிரி. அதை சமாளிக்க தனி திட்டம் தேவை’ என, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டி யில் உள்ள, இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்தாண்டு நவ., ௫ல் நடக்க உள்ளது.
இந்தத் தேர்தலுக்கு குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில், கலிபோர்னியா முன்னாள் கவர்னரும், ஐ.நா.,வுக்கான முன்னாள் அமெரிக்க துாதருமான நிக்கி ஹாலே களமிறங்கியுள்ளார்.
இந்த போட்டியில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரும் உள்ளனர்.
இந்நிலையில், குடியரசு கட்சியின் மூன்று நாள் மாநாடு வாஷிங்டனில் நேற்று முன்தினம் துவங்கியது.
இக்கூட்டத்தில் நிக்கி ஹாலே பேசியதாவது:
அமெரிக்கர்கள் வானத்தை பார்க்கும்போது, அங்கிருந்து சீனா, பலுான் வாயிலாக நம்மை உளவு பார்த்து வருவது, இதுவரை நாம் கேள்விப்படாத ஒன்று. இது நம் நாட்டுக்கு தர்மசங்கடமான விஷயம்.
சீனா விஷயத்தில் நாம் தவறு செய்யக் கூடாது. சீனா மிகவும் பலம் வாய்ந்த, அதே நேரத்தில் ஒழுக்கமான எதிரி. கொரோனா வைரஸ் பரவலில், நாம் சீனாவை பொறுப்பாக்க வேண்டும்.
அதே நேரத்தில், நம் நாட்டுக்கு தேவையான மருந்துகளை சீனா தான் அனுப்பி வருகிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டுக்கும் தொடர்பு உள்ளதை உணர வேண்டும்.
ஆனால், சீனா மீது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. நம் நாட்டில், ௩.௮௦ லட்சம் ஏக்கர் நிலம் சீன நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ளது. அதுவும் நம் ராணுவ தளங்களுக்கு அருகில் உள்ளது.
அமெரிக்காவின் யுகம் முடிந்துவிட்டது என்று சீனா நினைக்கிறது. அதனால் தான், அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் அது ஈடுபட்டு வருகிறது. ஆனால், அது தவறு. அமெரிக்கா தன் பெருமையை இழக்கவில்லை. நம் சில தலைவர்கள் தான், அவர்களுடைய பெருமையை இழந்துவிட்டனர்.
![]() |
ஆதரவு
சீனாவை வெல்ல வேண்டுமானால், நம்முடைய பொருளாதாரம் மேலும் வலுவாக இருக்க வேண்டும். அரசியல் ரீதியில் உறுதியான தலைமை தேவை. கடந்த, ஏழு – எட்டு தேர்தல்களை பார்க்கும்போது, மக்களின் ஓட்டுகள் நமக்கு தொடர்ந்து குறைந்து வருவது தெரிகிறது. இதை மாற்ற வேண்டும்.
ஒரு தனி நபராக, ஒரு கட்சியாக இல்லாமல், நம் நாடு வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிட வேண்டும். இதற்கு எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்