தமிழகத்தில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி

சென்னை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெருமளவில் முதலீடு செய்துள்ள பெருந்தொழில், சிறு தொழில் நிறுவனங்களில் பல மாநில தொழிலாளர்களும் அமைதியான சூழலில் பணியாற்றுகின்றனர். மாநில வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர். மேம்பாலகட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட முக்கிய துறைகளிலும் பெருமளவில் ஈடுபட்டு அத்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அனைத்து நிறுவனங்களிலும் தமிழக அரசின் தொழிலாளர் நல சட்டங்கள் கடைபிடிக்கப்படுவது தொழிலாளர் நலத் துறை மூலம் உறுதி செய்யப்படுகிறது.

விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழக மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழக அரசும் வெளிமாநில உடலுழைப்பு தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்திருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழகத்தில் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான, தவறான உள்நோக்கத்தோடு, விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்படுகிறது. இதில் உண்மை இல்லை. தொழில் அமைதி,சமூக அமைதிக்கு பெயர்பெற்ற தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாக செய்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமின்றி, அனைத்து மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.