நெருப்போடு விளையாடும் மத்திய அரசாங்கம்!

மீண்டும் ஒருமுறை நெருப்போடு விளையாடியிருக்கிறது மத்திய அரசாங்கம். ஆம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை ஒரு தவணையில் ரூ.50 வரை உயர்த்தியதன்மூலம் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,168.50-ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி விலையேற்றியதன்மூலம் பொருளாதாரத்தின் வறிய நிலையில் இருக்கும் சாதாரண மக்களை மத்திய அரசாங்கம் வாட்டி வதைக்கத் துணிந்திருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 100% உயர்ந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.663-ஆக இருந்தது. இது 2019-ம் ஆண்டில் 717-ஆக உயர்ந்து, 2019-ல் ரூ.825-ஆக அதிகரித்தது. கோவிட் உச்சத்தில் இருந்த 2020, 2021-ம் ஆண்டுகளில்கூட முறையே ரூ.826-ஆகவும், ரூ.835-ஆகவும் இருந்தது. 2022-ல் ரூ.915 என்கிற அளவுக்கு உயர்ந்து, இந்த ஆண்டில் ரூ.1,118-ஆக விற்கப் பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,168 என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு தயாரிக்க மூலப்பொருளாக இருப்பது கச்சா எண்ணெய். இதன் விலை சர்வதேச சந்தையில் கடந்த ஓராண்டு கணிசமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச்-ல் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 123 அமெரிக்க டாலராக இருந்தது, இப்போது 84.50 டாலராகக் குறைந்து உள்ளது. ஆனால், இதே காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மட்டும் ரூ.915-லிருந்து ரூ.1,168-ஆக உயர்ந்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்திவரும் மத்திய அரசாங்கம், கச்சா எண்ணெய் விலை குறையும்போது மட்டும் இவற்றின் விலையைக் குறைக்காமல் இருப்பது ஏன்? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதைக் காரணம் காட்டி, அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் ஒரு பொருளின் விலையை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தும்போது, பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. நம் நாட்டில் சில்லறைப் பணவீக்க விகிதம் (CPI) ஏற்கெனவே அதிகளவில் (கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, 6.5%) உள்ளது. இந்நிலையில், பணவீக்க விகிதம் குறைய வேண்டும் எனில், பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலை மக்கள் எளிதில் வாங்கும் அளவில் இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசோ இவற்றின் விலையை உயர்த்திக்கொண்டே செல்கிறது!

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என்கிற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் களை சலுகைகளாக அனுபவித்து வருகின்றனர். ஊழல் செய்வதற்கென்றே தேவையற்ற திட்டங்கள் தீட்டப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் ‘ஸ்வாஹா’ செய்யப்படுகிறது. இவற்றை எல்லாம் களையெடுத்தாலே பொருளாதார சுமை குறையும். ஆனால், நடுத்தர, ஏழை மக்களுக்கான மானியங்களைக் குறைப்பதிலேயே குறியாக இருக்கிறது மத்திய அரசு. இத்தகைய போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.