புதுச்சேரி மாநிலத்தில் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு சிகப்பு அட்டையும், வறுமை கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு மஞ்சள் நிற அட்டையும் வழங்கப்படுகிறது. அரசின் அனைத்து இலவச திட்டங்களும் இந்த ரேஷன் கார்டுகள் மூலமாகத்தான் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அரசின் இலவசங்கள் தேவைப்படாத, வசதி வாய்ந்த குடும்பங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுச்சேரி அரசின் கௌரவ குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளும்படி புதுச்சேரி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கௌரவ குடும்ப அட்டை பெற்றவர்கள் புதுச்சேரியின் சிறப்பு பிரஜையாக கருதப்பட்டு அவர்களுக்கு குடிமை பொருள் வழங்கல் துறையால் அளிக்கப்படும் அரசின் இலவசங்கள் எதுவும் வழங்கப்படாது என்றும், புதிய கௌரவ குடும்ப அட்டை வேண்டுபவர்கள் குடும்பத் தலைவர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை அசல் குடும்ப அட்டையுடன் குடிமை பொருள் வழங்கல் துறையில் ஒப்படைத்து கௌரவ குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
”அரசு அளிக்கும் பல்வேறு நிவாரணங்கள் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வழங்கப்படுகின்றது. ஆனால் வசதிபடைத்தவர்கள் சிலர் அதை சென்று வாங்குவது இல்லை ஆனால் அதற்குண்டான நிதியை நெடுநாளைக்கு அரசு பாதுகாத்து நிர்வகிக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. ஆகவே இது போன்றவர்கள் கெளரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த அட்டையை குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து சான்றுகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்திக்கொள்ளலாம்” என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்