புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ரைசினா மாநாடு டெல்லியில் கடந்த 2ம் தேதி தொடங்கி இன்று நிறைவடைகிறது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கிரிக்கெட் பாணியில் பேசியதாவது:
கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு பவுலர் மீதும் அவர் செயல்பாட்டின் மீதும் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தால், சரியான சமயத்தில் அவருக்கு சுதந்திரம் தருவீர்கள். அவர் கையில் பந்தை தருவீர்கள். அதுபோல, கேப்டன் மோடியும் தனது பவுலர்களுக்கு விக்கெட்களை வீழ்த்த குறிப்பிட்ட சுதந்திரம் தந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், கொரோனா பரவிய போது முழு லாக்டவுன் அறிவிப்பு போன்ற கடினமான முடிவுகளை எடுக்கும் போது கேப்டன் மோடியின் திறமை வெளிப்பட்டது. விளையாட்டிலும், சவாலான நேரத்திலும், கடின முடிவுகளை எடுப்பதற்கு தைரியம் வேண்டும். அந்த முடிவில் உறுதியாக நிற்க வேண்டும். நம்முடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். ஆபத்தை எதிர்கொள்ளும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.