பெங்களூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த போஸ்டரில் ஆங்கிலத்தில் இடது பக்க கிட்னி விற்பனைக்கு என்று பெரிய எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கீழ் சிறிய எழுத்துக்களால், புதுவீட்டிற்கு முன்பணமாக(Advance) வீட்டு ஓனர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க நிதி வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. அதற்கும் கீழே அதைவிட சிறிய எழுத்துக்களால் சும்மா கிண்டலுக்காக கூறியுள்ளேன். எனக்கு இந்திரா நகரில் வீடு வேண்டும். என்னுடைய ப்ரோஃபைலை பார்க்க கீழே இருக்கும் பார்கோடை ஸ்கேன் செய்யவும் என்று குறிப்பிட்டு கீழே ஒரு பார்கோடும் கொடுத்துள்ளார்.
இவரது பதிவை பார்த்த பலரும் தங்களுக்கும் இது போன்று ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். ஆனால், அதற்கு கீழ் 99acres.com என்ற வீடுதேடும் இணையதளம் பகிர்ந்துள்ள கருத்து பலரையும் சிரிக்க வைத்துள்ளது. அந்த இணையதளத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ramyukh உங்கள் கிட்னியை காப்பாற்றக்கூடிய ஒரு ஆப்சன் எங்களிடம் உள்ளது. அதே ஏரியாவில் மூன்று மாதங்களுக்கும் குறைவான அட்வான்ஸ் மட்டுமே வாங்கும் வீடுகள் விவரம் தங்களிடம் உள்ளதாக அந்த இணையதளம் பதிவிட்டுள்ளது.