புதுடில்லி: ” சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை அணை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த அணை இப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தால் வியந்து போவீர்கள்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உள்கட்டமைப்பு துறைக்கு, பட்ஜெட் மூலம் புதிய வளர்ச்சி கிடைக்கும். நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு எப்போதும் முக்கிய தூணாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு, 2014க்கு முன்பை விட தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கிறது. இது, வலுவாக இருந்தால், திறமையான இளைஞர்கள் வேலை செய்ய முன்வருவார்கள். திறன் மேம்பாடு, திட்ட மேம்பாடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அரசின் அனைத்து துறைகளும் மற்றும் அனைத்து மாநிலங்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த துறை வளரும் போது, நாடு வளர்ச்சி பெறும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த அணை இப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தால் வியந்து போவீர்கள். கல்லணை இன்னும் மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement