Doctor Vikatan: சிறுநீர் கழிக்கும்போது வரும் வாடை எதை உணர்த்துகிறது? ஒவ்வொரு முறை ஒவ்வொருவித வாடை வருகிறது. சாப்பிடும் உணவுக்கும் சிறுநீர் வாடைக்கும் தொடர்பு உண்டா? சிறுநீரில் வாடை வந்தால் சிகிச்சை அவசியமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா

நாம் சாப்பிடுகிற திட உணவுகளும், தண்ணீர் உள்ளிட்ட திரவ உணவுகளும் செரிமானமாகி, கழிவுகள் மலம் மற்றும் சிறுநீரின் வழியேதான் வெளியேறும். அதனால் அவற்றில் வாடை வருவது இயல்புதான்.
நம்மூரைப் பொறுத்தவரை ஏசி அறைகளில் வேலை செய்தாலும் அவ்வப்போது எழுந்து சென்று இளைப்பாற திறந்தவெளிப் பகுதிகள் இருக்கும். அதுவே வெளிநாடுகளில் எல்லாமே ஏசி செய்யப்பட்ட சூழலாக இருக்கும். அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு சிறுநீரில், அவர்கள் சாப்பிட்ட உணவின் வாடையே வீசும்.
சாப்பிட்ட பிறகு ஒருமணி நேரம் வரை வெளியேற்றும் சிறுநீரில், அந்த உணவின் வாடை வீசுவது இயல்புதான். அதன் பிறகு அந்த வாடை நின்றுவிடும். இந்த மாதிரியான வாடை பிரச்னைக்குரியதல்ல.
அதுவே மோசமான துர்வாடை என உணர்ந்தால் அது தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வாடை வரும்போது மருத்துவரை அணுகினால் அவர் சிறுநீர்ப்பாதை தொற்றா என சந்தேகித்து அதற்கான டெஸ்ட்டை பரிந்துரைப்பார். தேவைப்பட்டால் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டும் பரிந்துரைக்கப்படும்.

சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை அவர்களின் சிறுநீரில் ஒருவித இனிப்பு வாடைகூட வீசும். அதை அலட்சியப்படுத்தவே கூடாது. அது ‘டயாபட்டிக் கீட்டோஅசிடோசிஸ்'(Diabetic ketoacidosis) எனப்படும் மோசமான பாதிப்பாகக்கூட இருக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவுக்கதிகமானதன் அறிகுறியாகவும் அப்படி வாடை வீசலாம்.
எனவே நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது வருகிற வாடையின் தன்மை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள். உணவுடன் தொடர்புடையதா, சகித்துக்கொள்ள முடியாததா என பார்த்து, சந்தேகம் வந்தால் மருத்துவரை அணுகி, தேவையான பரிசோதனைகளைச் செய்து பாதிப்பு ஏதும் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.