கொளுத்தும் வெயில், கொட்டும் மழையில் இருந்து பணகுடி சிவன் கோயில் தேரை பாதுகாக்க நடவடிக்கை: சபாநாயகர் அப்பாவு உறுதி

பணகுடி: பணகுடியில் கொளுத்தும் வெயில், கொட்டும் மழையில் இருந்து ராமலிங்க சுவாமி- சிவகாமி அம்பாள் கோயில் தேரை பாதுகாக்க கூண்டு அமைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்துள்ளார். பணகுடி நகர திமுக நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், பக்தர்கள், ஊர் மக்கள் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவுவை அவரது இல்லத்தில்  நேரில் சந்தித்து கொளுத்தும் வெயில், கொட்டும் மழையில் இருந்து பணகுடி  ராமலிங்க சுவாமி- சிவகாமி அம்பாள் கோயில் தேரை பாதுகாக்க கூண்டு அமைக்க வேண்டும் என மனு கொடுத்தனர். மனு விவரம்: பணகுடி ராமலிங்க சுவாமி சமேத சிவகாமி அம்பாள் கோயில் தேரானது கோயில் அருகே சாலையோரத்தில் திறந்தவெளியில் கூண்டு அமைக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் வெயிலில் காய்ந்தும், மழை காலத்தில் மழையில் நனைந்தும், மற்ற காலங்களில் தூசி படிந்தும் காணப்படுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் கொட்டித் தீர்க்கும் தண்ணீரால் தேரில் உள்ள இரும்புப் பொருட்கள் துருபிடித்து காணப்படுகின்றன. எனவே, மழை, வெயிலில் இருந்து தேரை பாதுகாக்க கொட்டகை அமைத்துத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு கூறுகையில் ‘‘கொளுத்தும் வெயில், கொட்டும் மழையில் இருந்து பணகுடி  ராமலிங்க சுவாமி- சிவகாமி அம்பாள் கோயில் தேரை பாதுகாக்க விரைவில் கூண்டு அமைக்கப்படும். இதற்காக எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தேவையான நிதியை விரைவில் ஒதுக்கீடுசெய்து இதற்கான பணிகள் துவங்கப்படும். மேலும் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆவதால் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கோயில் தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைப்பதோடு திருவாசகம் முற்றோதுதல் நடத்துவதற்கு ஏற்ற இடத்தில் ஒரு மண்டபமும் அமைக்கப்படும்’’ என்றார். மனு கொடுக்கும் நிகழ்ச்சியின்போது பணகுடி நகர திமுக செயலாளர் தமிழ்வாணன், பணகுடி பேரூராட்சி கவுன்சிலர் கோபி கோபாலக்கண்ணன், வியாபாரிகள் சங்கத்தலைவர் நடராஜன், மதிமுக ஒன்றியச் செயலாளர்  சங்கர், திமுக மேலமைப்பு பிரதிநிதி  மாணிக்கம், திருவாசகம் முற்றோதுதல் குழு தலைவர் முத்து பிள்ளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.