சிடிஆர் நிர்மல் குமார் vs சிங்கை ஜி ராமச்சந்திரன்; சரியா 30வது நாள்… அதிமுகவில் ட்விஸ்ட்!

அரசியலில் நிரந்தர எதிரியும் அல்ல. நண்பனும் அல்ல என்ற கூற்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது. அதிமுக – பாஜக இடையில் அப்படி ஒன்றும் வெறுப்புணர்வு இல்லை. டெல்லியின் தயவுடன் தமிழ்நாட்டில் அதிமுக அரசியல் செய்த நிகழ்வுகளை பலரும் கண்கூடாக பார்த்திருப்பர். சசிகலாவிற்கு எதிரான தர்ம யுத்தத்தை அடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்பிற்கே பாஜக தான் அச்சாரம் போட்டது என்ற அதிகாரப்பூர்வ ஸ்டேட்மென்ட்டை யார் பேசியது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

எடப்பாடிக்கு பலம்

அதன்பிறகு உட்கட்சி பூசல், நம்பர் 2 அரசியல் என வெளியே துரத்தப்பட்டது வேறு கதை. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு முன்பிருந்தே எடப்பாடி பழனிசாமியின் கைகள் தான் ஓங்கியிருந்தன. இருப்பினும் சட்ட ரீதியிலான நிறைய சிக்கல்களை அடுத்தடுத்து சந்திக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுகவின் முகமாக எடப்பாடி தான் காட்சியளிப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர் முன்னிலையில் அதிமுகவில் இன்று சேர்ந்துள்ளார் சிடிஆர் நிர்மல் குமார்.

திமுக எதிர்ப்பு அரசியல்

இவர் தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராக இருந்தவர். திமுகவிற்கு எதிராக கடும் விமர்சனங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் முன்வைத்து வந்துள்ளார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வழக்குகளை வம்படியாக வாங்கிக் கட்டிக் கொண்ட கதைகளும் உண்டு. அந்த லிஸ்டில் பெரியார் குறித்த அவதூறு, ராகுல் காந்தி பற்றிய சர்ச்சை உள்ளிட்டவற்றை சொல்லலாம். கிட்டதட்ட தமிழ்நாடு பாஜகவின் ரைட் ஹேண்ட் போல செயல்பட்டு வந்தவர்.

அண்ணாமலை மீது விமர்சனம்

இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஏராளமான விமர்சனங்களை முன்வைத்து அக்கட்சியில் இருந்து வெளியேறி அதிரடியாக அதிமுகவில் இணைந்துவிட்டார். சரியாக ஒருமாதத்திற்கு முன்பு பிப்ரவரி 3ஆம் தேதி தான், அதிமுகவை வம்பிழுக்கும் வகையில் சிடிஆர் நிர்மல் குமார் பேசியிருந்தார். அதாவது, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதற்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

சிங்கை ஆர்.ராமசந்திரனுக்கு பதிலடி

அவர்களுக்கு தெரியும் எங்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று அதிமுக ஐடி விங் செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் பதிவிட்டார். அதற்கு, எல்லாம் தெரியும் எனில் 2017ல் டெல்லி வழிகாட்டுதல் படி ஏன் இணைந்தீர்கள். அன்று அது நடக்கவில்லை எனில் இன்று கட்சி யாரிடம் இருந்திருக்கும்? என சிடிஆர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்தார். இவ்வாறு அதிமுகவை வம்புக்கி இழுத்து 30 நாட்கள் ஆன நிலையில், அதே கட்சியில் சென்று இணைந்துள்ளார். சிங்கை ஆர்.ராமச்சந்திரன் தற்போது அதிமுக ஐடி விங் செயலாளராக இருந்து வருகிறார்.

எடப்பாடியின் திட்டம்

அவருக்கு போட்டியாக இன்னொரு ஐடி விங் நிர்வாகியா? இதை எடப்பாடி பழனிசாமி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது. சிடிஆர் நிர்மல் குமாருக்கு வேறு ஏதேனும் பதவிகள் கொடுத்து ரூட்டை திருப்பி விட வாய்ப்புள்ளது. இருப்பினும் சிடிஆர் நிர்மல் குமார் வருகையை பலமாகவோ, பலவீனமாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. தனிப்பட்ட வகையில் அரசியல் தேடிக் கொள்ளும் முயற்சி தானே தவிர. அதிமுகவிற்கு எள்ளளவும் பயனிருக்காது. டெல்லியின் சிக்னலை பொறுத்து தான் அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.