அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியைச் சந்திப்பாரா என்பதே தி.மு.க-வினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏற்கெனவே அழகிரியை, உதயநிதி சந்தித்து சுமுகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும் நிலையில், அடுத்ததாக ஸ்டாலின் சந்திப்பார் என்று சொல்லிவிட்டு சென்றதால், தற்போது மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருக்கும் நிலையில் அழகிரி ஆதரவாளர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ், இன்று காலை மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தி.மு.க-வினர் விமான நிலையத்தில் பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர். ஆறடி உயரமுள்ள பேனா நினைவுப்பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினர்.

கடந்த சில நாள்களாக அழகிரி வீடு அமைந்திருக்கும் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாகச் சுத்தம் செய்து வந்ததும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. கட்சி நிர்வாகிகளும் அது குறித்தே பேசி வந்தனர். ஆனால், இன்று காலை மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திலிருந்து மு.க.அழகிரி வீட்டுக்குச் செல்வார் என்று சொல்லப்பட்ட நிலையில், நேராக கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களைச் சார்ந்த தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், ராம்நாடு-சிவகங்கை வைகை பாசன விவசாயிகள் சங்கம், வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, பாரம்பர்ய மீனவர் சங்கம், துறைமுக விசைப்படகு சங்கம், வர்த்தக சங்கங்கள், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஒட்டன்சத்திரம் வட்டார விவசாயிகள் சங்கம், பெரியகோட்டை வட்டார விவசாயிகள் சங்கம், சிறுதொழில் நிறுவனங்களின் சங்கங்கள், கோகோ கிரீன் சப்ஸ்ட்ராக்ட்ஸ், முல்லைபெரியாறு–வைகை ஆறு நீரினை பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் சங்கம், தேனி மாவட்ட கோராப்பட்டு உற்பத்தியாளர்கள் சங்கம், தேனி மாவட்ட சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டார். அதை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

மதிய உணவு இடைவெளியில் விருந்தினர் இல்லத்துக்குச் சென்று ஓய்வுடுத்துவிட்டு, மாலை காவல்துறை ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, கீழடி சென்று அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இரவு திரும்பி மதுரை வரும்போது அழகிரி வீட்டுக்குச் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.