திருப்பத்தூர்: வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாழும் குறவர் இனத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள், தங்களுக்கு எஸ்சி சான்றிதழ் வழங்க கோரி, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் இந்த தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாதிச்சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன முறைகளில் போராட்டங்களை நடத்தி வரும் குறவன் இனத்தைச் சேர்ந்தவர்கள், அங்கேயே சமைத்து, உண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது 2 பள்ளி மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறவன் இன மக்களுக்கு விசிக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறவன் இனத்தைச் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆரதவை தெரிவித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறவன் இன மக்களுக்கு, ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பத்தூர் வந்தார்.
இன்று 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறவன் இன மக்களை சந்தித்து அவர் ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘ஆதி தமிழ் குடி என்பது குறவன் குடிதான். ஆங்கிலேயேர் காலத்தில் குறவன் இன மக்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் போராடக் கூடியவர்கள் என்பதால் அவர்களை அடக்கி வைக்க குற்றப்பரம்பரை என பிரித்து வைத்தனர். இதையடுத்து, அவர்களுக்கு இன்று வரை ஆட்சியாளர்கள் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நரிக்குறவர்கள் வீட்டிற்குச் சென்று சாப்பிடுகிறார்கள். ஆனால், அவர்கள் சாப்பிடுவதை இவர்கள் சாப்பிடுகறார்களா? என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்த மக்களுக்காக போராட புரட்சி படை உருவாகியுள்ளது. 7 நாட்களாக பசியும் பட்டியுனிமாக இங்கு போராடி வரும் குழந்தைகளை அதிகாரிகள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 500 கோடி செலவு செய்து வெற்றிப்பெற்றதை சாதனை என திமுக அரசு கூறி வருகிறது. எஸ்சி குறவன் சான்றிதழ் கேட்டு போராடும் மக்களை துறைச்சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் வந்து அவர்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இங்குள்ள மக்களின் பிரச்சனை, தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. சமூக நீதி பற்றி பேசும் இந்த அரசு, முதலில் சான்றிதழ் வழங்கிவிட்டு அதன் பிறகு சமூக நீதிப்பற்றி பேச வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, பசியும், பட்டினியுமாக கடந்த 7 நாட்களாக போராட்டத்தை தொடர்ந்து வரும் இந்த மக்களின் பிரச்சினையை தீர்க்க; அவர்களுக்கு உடனடியாக எஸ்சி சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தமக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்’’ என்றார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ‘‘எஸ்சி சாதிச்சான்றிதழ் கேட்டு போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால் துறைச்சார்ந்த அமைச்சரை சந்திக்க வேண்டிய நிலை வரும். வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன’’ என விமர்சித்தார்.