விருதுநகர் மாவட்டம் கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர்- விஜயகுமாரி தம்பதியினர். இவர்கள் மகன் கார்த்திக். மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்ற கார்த்திக், போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துள்ளார். இவர்களின் திருமணம் மணமகனின் குலதெய்வக் கோயிலான வழுக்கலொட்டியில் பத்ரகாளியம்மன், மாசான கருப்பசாமி கோயிலில் வைத்து வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் தரப்பில் நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருமணம் முடித்த சந்தோஷத்தில் வந்தாரை வரவேற்று அகம் மகிழ்ந்திருந்த கார்த்திக்கைச் சந்தித்துப் பேசினோம். முகம் மலர்ந்த புன்னகையுடன் தனது காதல் கதையை நமக்காக விவரித்தார். அவர், “ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றேன்.

அங்கு படித்துக்கொண்டே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டே எனது கடமைகளைச் செய்துகொண்டிருந்தேன். 2014-ல் ஒருசமயம் என்னுடன் பணிபுரிந்த பெண் ஒருவரை சந்திப்பதற்காக போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து இவர் (மனைவியைக் கை காண்பிக்கிறார்) வந்தார்.
அப்போதுதான் முதல்முறையாக கேட்டியா ஒலிவேராவை சந்தித்தேன். ஆமாங்க அதுதான் அவங்க பெயர் (சிரிக்கிறார்). இங்கிலாந்தில், பிரபல மருத்துவமனையில் நர்ஸாக ஒலிவேரா பணிபுரிந்துவருகிறார். முதல் சந்திப்பிலேயே நல்லதொரு புரிதல் இருவருக்குள்ளும் ஏற்பட்டது. டிசம்பர் மாதத்தில் முதலில் இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டோம். அடுத்துவந்த புதுவருடக் கொண்டாட்டத்தை ஒலிவேராவுடன் சேர்ந்து கழித்திட வேண்டும் என நினைத்தேன். அதற்காக ஒலிவேராவின் குடும்பத்துடன் புதுவருடப் பிறப்பைக் கொண்டாட அந்நாட்டில் வெளியே அழைத்துச் சென்றேன்.

அப்போது நான், ஒலிவேராவை கவனித்துக் கொண்ட விதமும் அவருடைய குடும்பத்தின் மீது காட்டிய அக்கறை, உபசரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களும் அவருக்கு என்னை வெகுவாகப் பிடித்துவிட்டது. இதைத் தொடர்ந்து எங்களது அடுத்தடுத்த சந்திப்புகளில் நாங்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். இருவருக்குள்ளும் ஒருவர்மீது ஒருவர் காதல் வயப்பட்டு இருப்பதை உணர்ந்து கொண்டோம்.
ஒரு சமயத்தில் ஒலிவேரா, என்னைத் திருமணம் செய்து கொள்வாயா என என்னிடம் கேட்கும்போது மறுப்பு ஏதும் சொல்லாமல் நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஆனால் அதன் பிறகு என் வீட்டில் பெரியவர்களை சமாதானப்படுத்துவதற்குத்தான் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனது வீட்டைப் பொறுத்தவரையில் அப்பாவை சம்மதிக்க வைத்துவிட்டேன்.
ஆனால் அம்மாவை சம்மதிக்க வைப்பதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. ஏனெனில் அம்மா மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். நகைச்சுவைக்காகக்கூட ஒரு பெண்ணின் பேச்செடுத்துப் பேச அனுமதிக்க மாட்டார். கல்லூரி நாள்களில்கூட, “நான் காதல் திருமணம் செய்துகொள்ளட்டுமா?” எனக் கேட்டதற்கு, அதெல்லாம் சரிப்பட்டு வராது கார்த்திக் எனத் தெரிவித்து மறுத்துவிடுவார். அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவரிடமிருந்து எனது திருமணத்திற்கு சம்மதம் வாங்க சிறிது கால தாமதமாகிவிட்டது.

இங்கிலாந்தில் வேலையில் இருக்கும்போது வீட்டிற்கு அடிக்கடி போனில் பேசுவதுண்டு. அவ்வாறு பேசும் சமயமெல்லாம் ஒலிவேராவை பற்றி அம்மாவிடம் நல்லவிதமாக எடுத்துக்கூறி ஒலிவேரா மீது நல்ல அபிப்பிராயத்தை அம்மா மனதில் பதிய வைத்தேன். அதேபோல அங்கு, எனக்கு அவர் செய்யும் உதவி, மருத்துவக் கவனிப்பு உள்ளிட்டவற்றையும் தவறாமல் சொல்லிவிடுவேன். இதனால் கூடுதல் அக்கறை எடுத்து ஒலிவேராவைப் பற்றியும், எனது குடும்பத்தார் கேட்க ஆரம்பித்தனர். இப்படி எங்கள் குடும்பத்திற்குள் ஒரு ஆளாக ஒலிவேராவை மனதளவில் சேர்த்து வைத்தேன்.
இதற்கிடையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் நானும், ஒலிவேராவும் இங்கிலாந்தில் திருமணம் செய்துகொண்டோம். இந்த விஷயம் எனது வீட்டில் பெரும் புயலையே கிளப்பியது. அந்தச் சமயத்தில் பிரச்னைகளை ஒலிவேரா கையாண்ட விதமும் பெரியவர்களிடத்தில் அவரின் பண்பான அணுகுமுறையும் எங்கள் மீதான பெரியவர்களின் கோபத்தைத் தணிக்க பெரும் காரணமாக இருந்தது. இதையடுத்து மெல்ல மெல்ல எங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

என் அம்மாவும், பெண்பிள்ளையின் பாவத்திற்கும், சாபத்திற்கும் நாம் ஆளாகக்கூடாது என்றதுடன் ஒலிவேராவைத் திருமணம் செய்து கொண்டதால் உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்கிறேன் என முழுச் சம்மதம் தெரிவித்தார். அதை தொடர்ந்து நாங்கள் முறைப்படி இந்தியாவில் வந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தீர்மானித்தோம்.
இதற்காக பெற்றோர்களிடம் பேசி திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். அதன்படி உறவினர்கள் முன்னிலையில் பாரம்பரிய கலாசாரப்படி இன்று ஒலிவேராவை திருமணம் செய்துகொண்டேன். ஒலிவேராவுக்கு நம் நாட்டு கலாசாரமும், பழக்கவழக்கமும் மிகவும் பிடித்துவிட்டது. இங்கிலாந்தில் வேலை செய்யும்போது கூட நமதுநாட்டு கலாச்சாரத்தின்படி காதில் கம்மல், மூக்குத்தி,

வளையல், தோடு, நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டுதான் வேலைக்கு செல்வார். அந்த அளவிற்கு நமது கலாசாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதேபோல தமிழ் மீது கொண்ட ஆசையின் காரணமாகவும் தமிழ் பயில பயிற்சி எடுத்து வருகிறார். தற்போது நாம் பேசுவதைக்கூட அவரால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் பதில் அளிப்பதற்குதான் அவருக்கு வார்த்தைகள் வராது. ஆனால் விரைவில் நன்றாக தமிழ்பேசும் மருமகளாக ஒலிவேராவைப் பார்க்கலாம். தற்போது திருமணம் முடிந்த கையோடு மார்ச் 18ம் தேதி வரை சொந்த வீட்டில் தங்கிவிட்டு அதன் பிறகு இங்கிலாந்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். இனி விடுமுறை காலங்கள் முழுவதையும் சொந்த ஊரிலேயே கழிக்கத் தீர்மானித்துள்ளோம் என்றவரிடம் நாம் சில கேள்விகள் கேட்டோம்.
திருமணத்திற்கு ஒலிவேராவின் பெற்றோர்கள் ஏன் வரவில்லை? ஒலிவேரா குடும்பத்தில் சிக்கல்கள் நிறைந்துள்ளன. அவரது உறவினர்களும் ஒலிவேரா மீதோ, அவரின் குடும்பத்தினர் மீதோ அவ்வளவாக பற்று கொண்டிருக்கவில்லை. எனவே, தனித்து விடப்பட்ட ஆள் போன்றுதான் ஒலிவேரா இங்கிலாந்தில் வேலை செய்துவந்தார். வெளிநாட்டைப் பொறுத்தவரையில் 18 வயது வரை பெற்றோர் பாதுகாப்பிலிருக்கும் பிள்ளைகள், அதன்பிறகு சுதந்திரமாக வாழப் பழகிக்கொள்கின்றனர். அந்தவகையில் ஒலிவேராவையும் அவர்களின் பெற்றோர் சுதந்திர வாழ்க்கைக்குத் தள்ளியிருந்தனர். எனவே, திருமணத்திற்கான முடிவெடுத்துவிட்டு நாங்கள் இருவரும் அவரின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியபோதுகூட, கைகுலுக்கி வாழ்த்துகள் தெரிவித்தனர் அவ்வளவுதான்.

இத்தகைய குடும்பப் பின்னணியால் பந்த பாசத்தை உணராத ஒலிவேரா, என் குடும்பத்தினருடன் ஒன்றிப்பழகியதும், என் பெற்றோர் அனுசரணையுடன் ஒலிவேராவிடம் நடந்துகொண்டதும் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. சின்ன விஷயம் என்றாலும்கூட அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் என எல்லோரிடத்திலும் கருத்துகேட்டு அதன் பிறகு தீர்க்கமான முடிவெடுத்து சொந்தப்பந்தங்கள் ஒன்றுகூடி அந்த விழாவைச் சிறப்பாக்குவது ஒலிவேராவிற்குப் பல வருட ஏக்கமாக இருந்திருக்கிறது. அது நமது தமிழ்க் கலாசாரத்தில் நீக்கமறக் கிடைக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட அவர் என்னைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். என்னையும், என் வீட்டாரையும் நம் நாட்டுப் பழக்க வழக்க கலாசாரங்களையும் நேசிக்கும் ஒரு பெண்ணை நானும் மனதாரக் காதலித்து ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி என்றார்.
கேட்டியா ஒலிவேரா என்ற பெயருடன் மீனாட்சி என்ற பெயரும் உங்களது திருமணப் பத்திரிகையில் அச்சிடப்பட்டிருக்கிறது… இதன் பின்னணி? (மெல்லச் சிரிக்கிறார்) அது ஒரு வேடிக்கையான சம்பவம். பொதுவாக உறவினர்களுடன் கலந்துரையாடும்போது இவனுக்கு இந்தப்பெண் அவனுக்கு அந்தப்பெண் என கேலி கிண்டல் செய்வார்கள்.

அப்படித்தான் ஒருமுறை என் மாமா பேசும்போது என்னில் மூத்தவர் ஒருவருக்கு காமாட்சி என்ற பெயரில் பெண்ணையும், எனக்கு மீனாட்சி என்ற பெயரில் பெண்ணையும் பார்த்து திருமணம் செய்துவைக்க வேண்டும் என வேடிக்கையாக கூறினார். இதை ஏதேச்சையாக ஒலிவேராவிடம் சொல்லிச் சிரித்தபோது, அவருக்கு மீனாட்சி என்ற பெயர் மிகவும் பிடித்துப்போனது. மீனாட்சி பெயருக்கான அர்த்தமும், பெயருக்கான பின்னணி வரலாறும் அவரை மெய்சிலிர்க்கச் செய்ததுடன் தமிழ்மொழி கற்பது மீதான ஆர்வத்தையும் அதிகரித்தது. பின்னாளில் அதையே தனக்குச் செல்லப்பெயராகவும் வைத்துக்கொண்டார். இப்போது செல்லப்பெயராக அழைக்கப்படும் மீனாட்சியை எதிர்காலத்தில் அதிகாரபூர்வமாக மாற்றும் எண்ணமும் ஒலிவேராவிற்கு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
5 வருட ரகசிய திருமண வாழ்க்கை உங்கள் வீட்டுக்கு தெரிந்தது எப்படி? “அதுவா.. நானும், ஒலிவேராவும் திருமணம் செய்துக்கொண்டோமே தவிர பெற்றோர்களின் முழுச் சம்மதம் இல்லாமல் நிறைவான வாழ்க்கை வாழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அந்தசமயம், என் தங்கைக்கும் திருமணம் ஆகவில்லை. ஆகவே எனது முடிவு, தங்கையின் வாழ்க்கையை பாதித்துவிடுமோ என்ற பயமும் இருந்தது. ஆகவே தகுந்த நேரத்தில் உண்மையை வெளியே சொல்லவேண்டும் எனக் காத்திருந்தேன். ஆனால் அரசல்புரசலாக என்னைப் பற்றிய பேச்சுக்கள் வீட்டுக்குள் வலம்வந்துக்கொண்டேதான் இருந்தது. ஒருவழியாக தங்கைக்கு கடந்த நவம்பரில் திருமணம் நடந்து முடிந்ததும் என் திருமணத்தைப் பற்றிய உண்மையைக் கூறி சரண்டர் ஆகிவிட்டேன்” என விவரங்களைப் பகிர்ந்துகொண்ட கார்த்திக்கிற்கு அடுத்தடுத்து வாழ்த்துகள் சொல்ல ஆட்கள் வரவும் இதழ்சுருங்காப் புன்னகையுடன் விடைகொடுத்தார் புதுமாப்பிள்ளை.