ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா உயிரிழந்ததனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்ற நிலையில் அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக படும் தோல்வியைச் சந்தித்தது.

இதன் எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, இட்டமொழி மற்றும் மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ‘எட்டு தோல்வி எடப்பாடி’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுவரொட்டி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் சி.டென்சிங் சுவாமிதாஸ் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. வந்த பிறகு தொடர்ச்சியாக எட்டு தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது.
‘எட்டு தோல்வி எடப்பாடியாரே.. உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த எட்டு தேர்தல்கள் விவரமும் சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த சுவரொட்டி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.