சென்னை மதுரவாயலில் திருமண ஆசைக்காட்டி, காதல் வலையில் சிக்கவைத்து, ரூ.68 லட்சத்தை ஏமாற்றிய “நாடக காதலன்”, போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை : திருமண வயதை எட்டாத இளம்பெண் ஒருவர், தனது பள்ளி பருவம் முதலே நிஷாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய நிஷாந்த், இளம்பெண்ணுடன் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது.
மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த இளம் பெண்ணிடம் ரூ.68 லட்சத்தை பெற்று கொண்ட நிஷாந்த், திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், தொழில் அதிபர் ஒருவரின் மகளுடன் நிஷாந்துக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இதனை அறிந்த இளம்பெண், நாடக காதலன் நிஷாந்த் குறித்து மதுரவாயல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நிஷாந்தை தேடி வந்தனர். இதனை அறிந்த தொழில் அதிபர், தனது மகளுடன் நிஷாந்துக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார்.
போலீசார் தேடுவதை அறிந்த நாடக காதலன் நிஷாந்த் தலைமறைவாகினார். இந்நிலையில், நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, மனஉளைச்சலில் போரூர் மேம்பாலத்தில் இருந்து ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.