விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கிய பிரபல தயாரிப்பாளர் வறுமையால் மிகவும் கஷ்டப்படுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
சினிமாத்துறையில் எதுவும் நடக்கும், எல்லாமும் சாத்தியம். புகழின் உச்சியில் இருப்பவர்கள், அதல பாதாளத்திற்கு செல்வதும் நடக்கும். எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அப்படி சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் தற்போது மிகவும் கஷ்டத்தில் வாடிவருகிறார்.
தயாரிப்பாளர் வி.ஏ.துரை, எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தியவர். என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் ஆகியப் படங்களை தயாரித்துள்ளார்.
இவர் தயாரித்த பிதாமகன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றதோடு, 3 மாநில விருதுகளையும், 6 ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றது. ஆனால் வி.ஏ.துரை தயாரித்த சில படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், சம்பாதித்த பணத்தை அதில் இழந்துள்ளார்.
தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கால்களில் ஏற்பட்டுள்ள புண்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருவதாகவும், கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் தனியே மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மருந்து வாங்கக் கூட காசில்லாமல் வறுமையில் வாடும் தனக்கு யாராவது உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வி.ஏ.துரையின் தற்போதைய நிலை, திரைத்துரையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in