‘அமுத்சுரபி’ என்ற கூட்டுறவு கடன் சங்கத்தினர், அதிக வட்டி தருவதாகக் கூறி, தங்களிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு, நிறுவனத்தை மூடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக, முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து புகைரளித்தவர்களில் ஒருவரான காஜாமொய்தினிடம் பேசினோம். “முதுகுளத்தூர் டவுனில் இந்த ‘அமுத்சுரபி’ நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றிய உள்ளூர் ஆட்கள், இது இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு துறையின் அனுமதி பெற்ற கடன் கூட்டுறவுச் சங்கம் எனவும், இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 14 சதவிகிதம் வட்டி தருவதாகக் கூறினர். அதன்படி தினசரி ரூ.300 முதல் ரூ.1,000 வரையும், வாரம் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையும் அவர்களே நேரடியாக வந்து பணத்தை வாங்கிச் சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக 14 சதவிகிதம் வட்டியை மட்டும் கொடுத்த அவர்கள், முதலீடு செய்த பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறுவனத்தை முழுவதுமாக காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர். அவர்களிடம் பணியாற்றிய உள்ளூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் பணம் கட்டி ஏமாந்த நாங்கள் கேட்டபோது, ரூ.10,000 சம்பளத்துக்குத் தாங்கள் வேலை பார்த்ததாகவும், மற்றபடி அது ஒரு மோசடி நிறுவனம் என்பது தங்களுக்குத் தெரியாது எனவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலத்தில் அமுத்சுரபி நிறுவனம் 58 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டிருப்பதை அறிந்தோம். எனவே எங்களிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றிய மோசடி கும்பலைப் பிடித்து, பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு புகார் அளித்திருக்கிறோம்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரை அழைத்து, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி உத்தரவிட்டிருக்கிறார்” என்றார்.
முதுகுளத்தூர் மட்டுமின்றி கமுதி, கடலாடி, சாயல்குடி, பரமக்குடி ஆகிய பகுதிகளிலும் இந்த ‘அமுத்சுரபி’ போலி கூட்டுறவுச் சங்க நிறுவனம், 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை திறந்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை, இந்தக் கும்பல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் குற்றவாளிகளைத் தேடும் பணி ஏற்கெனவே தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.