ஈரானில் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்; பெற்றோருக்கும் தொடர்பு: அதிர்ச்சி தகவல் வெளியீடு

டெஹ்ரான்,

ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக பரவியது.

இந்நிலையில், அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் கடந்த நவம்பரில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரவலாக நடந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

ஷியா பிரிவு முஸ்லிம்களின் நகரான குவாம் நகரில் நவம்பரில் தொடங்கிய இந்த நிகழ்வு ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்கள் வரை பரவியுள்ளது.

இதுபற்றி அந்நாட்டு விசாரணை அமைப்புகள் நேற்று வெளியிட்ட செய்தியில், 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு மர்ம முறையில் விஷம் கொடுக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவத்தில் முதன்முறையாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என தெரிவித்தது.

ஈரானின் தலைவர் அயோத்துல்லா அலி காமினேனி, சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என்றும் உத்தரவிட்ட நிலையில், கைது நடவடிக்கை தொடர்ந்து உள்ளது.

இதனால், குஜிஸ்தான், மேற்கு அஜர்பைஜான், பார்ஸ், கெர்மான்ஷா, கோரசன் மற்றும் அல்போர்ஜ் என 6 மாகாணங்களில் சந்தேகத்திற்குரிய பல நபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்கள் தீங்கு ஏற்படுத்தும் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் மாணவியின் பெற்றோர் என உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தெரிவிக்கின்றது.

இந்த மாணவிகள் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி வளாகங்களில் விரும்பத்தகாத மணம் வீசியுள்ளது. அதன் பின்னரே இதுபோன்ற பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உண்மை கண்டறியும் குழு உறுப்பினரான முகமது ஹாசன் அசாபாரி கூறும்போது, 230 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு விஷம் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளார்.

இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய பொருளை பெற்றோர், தங்களது குழந்தைக்கு கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்து, அதனால் பாதிக்கப்படும் பிற மாணவிகளை வீடியோ எடுத்து தங்களுக்கு அனுப்பும்படி செய்து உள்ளனர்.

இதனால், அச்சுறுத்தலை ஏற்படுத்தி பள்ளிகளை மூட திட்டமிட்டு உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 3 பேருக்கு எதிராக, சமீபத்திய அமினி விவகாரத்தில் ஏற்பட்ட கலகம் உள்பட பல்வேறு குற்ற பதிவுகள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த விஷ பொருள் வாயுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பொடி அல்லது பசை வடிவில் அல்லது திரவ பொருளாக இருக்க கூடும். அவை ஹீட்டரில் ஊற்றி வெப்பப்படுத்தும்போது, சிக்கல்களை ஏற்படுத்தி இருக்க கூடும் என கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனையில் மாணவிகளின் உடலில் விஷம் பரவி இருந்தது தெரிந்தது. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் கல்விக்கு எதிரான திட்டமிட்ட சதி முயற்சியாக இருக்க கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.