சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவோர் மீதும், சாலை விதிகளை மீறுவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்டு சின்னசேலம், கீழ்குப்பம் ஆகிய இரு காவல் நிலையங்கள் உள்ளன. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இவற்றில் எலியத்தூர்-கனியாமூர் சாலை, சின்னசேலம் புறவழிச்சாலை, சின்னசேலம் நகர மெயின்ரோடு, கூகையூர் ரோடு, நைனார்பாளையம்-வீ.கூட்ரோடு புறவழிச்சாலை போன்ற சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதுடன், அதிக அளவில் உயிர்பலி சம்பவங்களும் நடக்கிறது.
இதில் பல வாகன ஓட்டிகள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் குடித்து விட்டும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஒட்டி வந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். அதைப்போல சின்னசேலம்-கனியாமூர் சாலையில் சாலைவிதிகளை பின்பற்றாமல் வாகன ஓட்டிகள் செல்லும் திசைக்கு எதிராக டிராக்டர், கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி வந்தும், முறையாக வருபவர்களுக்கு வழிவிடாமல் இடிப்பது போல வந்தும் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதில் முறையாக சாலைவிதிகளை மதித்து வாகனம் ஓட்டி வந்தவர்களும் விபத்தில் பாதிக்கப்படுகின்றனர். காவல் துறையும் விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பு கட்டைகளை வைத்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அதையும் மீறி விபத்துகள் நடக்கிறது.
எனவே சின்னசேலம் பகுதியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சாலை விதிகளை மீறி எதிரில் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்துபவர்களுக்கும் அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல்துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து இந்த பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.