ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்குமிடையே, பால்டிக் கடலுக்கடியில் குழாய் மூலம் எரிபொருளைக் கொண்டுசெல்லும் நார்டு ஸ்ட்ரீம்-2 (Nord Stream 2) எரிபொருள் குழாய்களில், கடந்த ஆண்டு மர்மமான முறையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், தங்களுக்குத் தொடர்பில்லை என உக்ரைன் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், ரஷ்யாமீது பொருளாதாரத் தடைவிதித்ததையடுத்து, பால்டிக் கடல்வழியே கடலுக்கடியில் `நார்டு ஸ்ட்ரீம் 1′ குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் வழங்கிவந்த ரஷ்யா, பராமரிப்பு பணி என்று கூறி, எரிபொருள் குழாய்களை மூடியது.

அதைத் தொடர்ந்து, `நார்டு ஸ்ட்ரீம் 1′ குழாய்களுக்கு அருகிலேயே செல்லும் `நார்டு ஸ்ட்ரீம் 2′ எரிபொருள் குழாயில் கடந்த ஆண்டு செப்டம்பரில் திடீர் கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு ஸ்வீடன் குழு மேற்கொண்ட விசாரணையில், யாரோ குழாய்களை வெடிவைத்து தகர்த்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இப்படியிருக்க, நார்டு ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்கள் வெடிப்புச் சம்பவத்துக்கு, உக்ரேனியர்கள் அல்லது ரஷ்யர்களைக் கொண்ட `உக்ரைன் சார்பு குழு’வே காரணம் என, அமெரிக்க அதிகாரிகளால் ஆய்வுசெய்யப்பட்ட உளவுத்துறையை மேற்கோள்காட்டி, பிரபல ஆங்கில நாளிதழ் நேற்று அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்களுடனான சந்திப்புக்கு முன்னதாக ஸ்டாக்ஹோமில் (Stockholm) செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் (Oleksiy Reznikov), “இது எங்களின் செயல்பாடு அல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் தரப்பிலிருந்து இத்தகைய கருத்து வெளியான பிறகு கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov), “விசாரணை இல்லாமல் அமெரிக்க அதிகாரிகள் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது. இதுவொரு கவனத்தை திசை திருப்பும் முயற்சி. எனவே, வெளிப்படைத்தன்மைவாய்ந்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை கோர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.