திருநெல்வேலி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திருநெல்வேலியில் விழிப்புணர்வு நிகழ்வாக 23 அரசு பெண் பணியாளர்கள் தங்கள் தலை முடியை தானமாக வழங்கினர். புற்றுநோய் பாதிப்பால் கூந்தலை இழந்து தவிக்கும் மகளிருக்கு விக் தயாரித்து வழங்குவதற்கு தானமாக வழங்கப்பட்ட தலைமுடி கொண்டு செல்லப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவும் உள்ளங்கள் நெல்லை கேன்சர் கேர் சென்டர் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள் முழுக்க நடைபெற்றது. இந்த விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை) சுகன்யா, கேன்சர் கேர் சென்டர் இயக்குநர் ராம்குமார், டாக்டர் அபிராமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையொட்டி அரசு பெண் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொண்டனர். புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெறும் பெண்களின் தலைமுடி கொட்டிவிடுவதால் மனதளவில் அவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதை தவிர்க்கும் பொருட்டு தலைமுடியால் விக் தயாரித்து அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் சேவையை சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் செய்து வருகிறது. இந்த மையத்துடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் விக் தயாரிக்கும் பணியில் மகளிர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு விக் தயாரித்து வழங்குவதற்காக அரசு பெண் பணியாளர்கள் பலர் தங்கள் தலைமுடியை தானமாக வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். அதன்படி மகளிர் தினவிழாவின் ஒரு பகுதியாக தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் 23 பெண் பணியாளர்கள் தங்கள் தலைமுடியை தானமாக வழங்கினர்.
அவர்களது கூந்தலில் இருந்து தலா 8 இஞ்ச் அளவுக்கு தலைமுடி வெட்டி எடுக்கப்பட்டு முக்கூடலில் விக் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தலைமுடியை தானமாக வழங்கியவர்களை சக பெண் பணியாளர்கள் பாராட்டினர்.