புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெறுவதாக அதிகாரிகளுடன் பாஜ அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் அரசின் மானியம், நலத்திட்டம் பெற விரும்பாத வசதி படைத்தவர்கள் தங்களது ரேஷன் கார்டை ஒப்படைத்து கவுரவ கார்டுகளாக மாற்றும் நிகழ்ச்சி குடிமைப்பொருள் வழங்கல் துறையின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாஜ அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது குடும்ப அட்டைகளை சரண்டர் செய்தனர். அப்போது கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வருபவர்களை அலைக்கழிக்கிறீர்கள். விண்ணப்பத்துக்கு ஒரு அதிகாரி ரூ.5 ஆயிரம் பணம் வாங்குவதாக புகார் வந்துள்ளது. விண்ணப்பத்துக்கு காசு வாங்கி விட்டுத்தான் வேலை பார்ப்பீர்களா? ஒரு நாளைக்கு 10 விண்ணப்பம் என 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறதே என குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அமைச்சர் நமச்சிவாயமும் அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசினார். இணை இயக்குநர் ரவிச்சந்திரனிடம், உங்கள் வீட்டு வேலைக்காரர்களா நாங்கள்? தொகுதி மக்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தால், அதனை நீங்கள் கையில் வாங்க மாட்டீர்களா? தூக்கி வீசுகிறீர்களாமே, தபாலில் கொடுத்து விட்டு போ என ெசால்வீர்களா? என கோபமாக கேட்டார். குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.