பெங்களூரு: கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தின் கழிப்பறையில் புகைபிடித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இண்டிகோ விமானம் கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு புறப்பட்டது. அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரியங்கா சக்கரவர்த்தி (24) என்பவர் பயணம் செய்தார். அப்போது அவர், விமானத்தின் கழிப்பறையில் புகைபிடித்து கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் விமானம் பெங்களூரு வந்தடைந்தது. முன்னதாக, விமானம் தரையிறங்குவதற்கு முன், பயணிகளை தங்களது இருக்கையில் அமரும்படி விமான பணி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
அந்த நேரத்தில் பிரியங்கா சக்கரவர்த்தி, அங்கு இல்லை. இதையடுத்து அவர்கள், கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது, அவர் புகை பிடிப்பது தெரிந்தது. உடனே அவர்கள், விமானத்தில் புகை பிடிக்க கூடாது என எச்சரித்து, கதவை திறக்கும்படி கூறினர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த குப்பை தொட்டியில் சிகரெட் இருப்பது தெரிந்தது. பின்னர் ஊழியர்கள் குப்பை தொட்டியில் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து, விமானம் தரை இறங்கியவுடன் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரிடம் பிரியங்காவை, ஊழியர்கள் ஒப்படைத்தனர். மற்றவர்களின் உயிருக்கோ அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கோ ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்காக பிரியங்காவை போலீசார் கைது செய்தனர்.