புதுடில்லி, தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பிய வழக்கறிஞருக்கு வரும், 20ம் தேதி வரை முன் ஜாமின் அளித்து புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் பணியாற்றும் பீஹார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில், ‘வீடியோ’க்கள் பரவியது.
இதனால் தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டது. வெளி மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
சமூக வலைதளத்தில் பொய் தகவலை பரப்பியவர்கள் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கறிஞர் பிரசாந்த் குமார் உம்ராவ் என்பவர் மீது, துாத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது; இவர், உத்தர பிரதேச மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.
இதையடுத்து, புது டில்லி உயர் நீதிமன்றத்தில் பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 20ம் தேதி வரை அவருக்கு முன் ஜாமின் அளித்து உத்தரவிட்டது.
அதற்குள் அவர் வழக்கின் அதிகார வரம்புக்கு உட்பட்ட சென்னை நீதிமன்றத்தை அணுகும்படி அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பிரசாந்த் குமாரின் நிரந்தர முகவரி, ‘மொபைல் போன்’ எண் மற்றும் அவர் எங்கெங்கு செல்கிறார் என்ற விபரங்களை தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement