கேரளாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் வழக்குகளான POCSO வழக்குகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்குகளின் அபரிமிதமான அதிகரிப்பு என்பது பலரையும் நடுங்க வைத்துள்ளது.
கடந்த இரண்டே ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று மலையாள பத்திரிகை ஒன்று தகவல் தெரிவிக்கிறது. ஊரடங்கு காலகட்டத்தில் குழந்தைகள் கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயகரமான போக்கையும் இது எடுத்துக்காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில், கேரளாவில் 3056 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021இல் 3559 ஆகவும், 2022இல் 4586 ஆகவும் அதிகரித்துள்ளது.
இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால், கொரோனா ஊடரங்கு காலத்தில், குழந்தைகள் தங்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில், 46 மைனர் சிறுமிகள் சித்திரவதை காரணமாக கர்ப்பமடைந்தனர். அவர்களில் 23 பேர் குழந்தையை பெற்றெடுத்தனர். இந்த போக்கு குழந்தைகள் தங்கள் வீட்டிற்குள் கூட பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க இன்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த புள்ளிவிவர தகவல்கள் நினைவூட்டுகின்றன. குழந்தைகள் மீது இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளா போன்ற அதிக கல்வியறிவு உள்ள மாநிலத்தில் இத்தகைய குழந்தை வன்முறை வழக்குகள் அதிகரித்துள்ளது வெறும் அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, இதுகுறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியதும் இங்கு அவசியமாகிறது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயப்படாமல் குழந்தைகள் வளரவும், பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசாங்கம், சட்ட அமலாக்க துறைகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும். நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.