டெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த 4 ஆண்டில் 92 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ள ராகுல்காந்தி, இந்திய நாடாளுமன்றத்தை குறை கூறுவதா? என்று ஒன்றிய அரசின் மூத்த ஆலோசகர் கேள்வி எழுப்பி உள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். அவரது உரையில், ‘இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் மவுனமாக்கப்படுகின்றன’ என்று குறிப்பிட்டு பேசினார். இவரது கருத்துக்கு ஆளும் பாஜக தரப்பில் கண்டன குரல்கள் எழுந்தன.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘வயநாடு எம்பியான ராகுல் காந்தி, ஒரு எம்பியாக தனது செயல்திறன் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குறைந்தளவே பங்கேற்றுள்ளார். அதனை மறைப்பதற்காக, இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மவுனமாக்கப்பட்டன என்று ஆதாரமற்ற கூற்றை தெரிவித்துள்ளார். கடந்த 2019 முதல் 2023 வரை அவர் நாடாளுமன்றத்தில் மொத்தம் 92 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளார்.
இதே காலகட்டத்தில் கேரள எம்பிக்களின் கேள்வி சராசரி 216 ஆகவும், தேசிய அளவில் எம்பிக்களின் கேள்வி சராசரி 163 ஆகவும் உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க முடியாது என்று கூறும் ராகுல் காந்தியின் பொய்களுக்கு நாடாளுமன்ற தரவுகளில் பதில் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.