தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்..!!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யும் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அளித்த அறிக்கையின்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்பதற்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர் தற்பொழுது ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட முன் வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநரின் காலதாமதால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தமிழகத்தில் இதுவரை 44 பேர் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது.
முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழக ஆளுநர் இதுபோன்ற செயல்படலாமா? ஏற்கனவே 4 மாதம் காலம் அதற்கான முடிவை எடுக்காமல் காலதாமதம் செய்ததோடு மீண்டும் விளக்கம் கேட்டு கால விரயத்தை ஏற்படுத்தாமல் உடனடியாக ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்ப வேண்டும். தமிழகத்தில் அப்பாவி உயிர் தொடர்ந்து பலியாவதை தடுக்காமல் இனியும் ஆளுநர் காலதாமதம் செய்தால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதற்கு இணையாக அமைந்துவிடும்” என அந்த அறிக்கையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.