மீரட், காங்கிரஸ் உறுப்பினரும், ‘டிவி’ நடிகையுமான அர்ச்சனா கவுதம் என்பவரை மிரட்டியதாக, காங்., கட்சியின் பொதுச் செயலர் பிரியங்காவின் உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் அர்ச்சனா கவுதம், 27. ‘டிவி’ நடிகையான இவர், ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினரான அர்ச்சனா, கடந்தாண்டு நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில் ஹஸ்தினாபூர் தனித் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அர்ச்சனாவின் தந்தை கவுதம் புத்தா, போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கடந்த மாதம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின்போது பிரியங்கா, என் மகளை சந்திக்க விரும்புவதாக, அவருடைய உதவியாளர் சந்தீப் சிங் அழைத்துச் சென்றார்.
ராய்ப்பூரில் என் மகளிடன் தவறாக நடந்து கொண்ட சந்தீப், ஜாதியைக் கூறி இழிவாக திட்டிஉள்ளார்.
மேலும், தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, சந்தீப் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement