ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, வாட்ஸ்அப்பில் பரவிய ஆடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரிக்க மாவட்ட எஸ்.பி தங்கதுரை உத்தரவிட்டார். அதன்பேரில், பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் பள்ளி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அ.தி.மு.க கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜா முகமது ஆகியோர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சிறுமி என்றும் பாராமல் மூன்று பேரின் காம பசிக்கு இரையாக்கிய மாணவியின் உறவினர் உமா, அவருக்கு உடந்தையாக இருந்த கயல்விழி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
இதில் மேலும் சில முக்கிய நபர்களுக்குத் தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கிறது எனவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் மகளிர் அமைப்பினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வணிகர்களும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருக்கிறார்.