'விடுதலை' விழா : இளையராஜாவை டென்ஷனாக்கிய சூரி ரசிகர்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கதையின் நாயகனாக சூரி நடிக்க, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'விடுதலை'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்காக மதுரையிலிருந்து ஆட்களை அழைத்து வந்திருந்தார் சூரி. ரசிகர் மன்ற பேனர்களுடன் பலரும் விழா அரங்கில் அமர்ந்து கொண்டு 'சூரி' என்ற பெயரை உச்சரித்தாலே சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். விழா தொடங்குவதற்கு முன்னதாக இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை இசைக்குழுவினர் பாடிக் கொண்டிருந்தனர். அதைக் கூடக் கேட்கவிடாமல் அவ்வப்போது கத்திக் கொண்டே இருந்தனர்.

இளையராஜா வந்த பிறகு நேரடியாக மேடை ஏறி இசையை வெளியிட்டார். அவர் பேசும் போதும் சத்தமிட்டுக் கொண்டே இருந்தார்கள். அதனால், கோமடைந்த இளையராஜா இப்படியே கத்திக் கொண்டிருந்தால் மைக்கைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன் என்றார். அதன்பிறகே அவர்கள் கத்துவதை நிறுத்தினார்கள்.

அதன் பிறகு மேடையில் படக்குழுவினர் அமர்ந்து படத்தைப் பற்றிப் பேசினார்கள். யார் மேடையில் பேசினாலும் 'சூரி' என்று சொன்னால் சத்தம் போடுங்கள் எனச்சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களது சத்தம் ஒரு கட்டத்தில் ஓவராகப் போக சூரியே எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டு நிறுத்தச் சொன்னார். இதெல்லாம் சூரிக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது.

இப்படித்தான் சந்தானம் அவரது பட விழாக்கள் நடக்கும் போதெல்லாம் இப்படி ஆட்களை வரவழைத்து ஆரவாரம் செய்யச் சொல்வார். அவரது வழியில் இப்போது சூரியும் சேர்ந்துவிட்டார் போலும். கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம். அதை இப்படியெல்லாம் செய்து கெடுத்துக் கொள்ளக் கூடாது என விழாவுக்கு வந்தவர்கள முணுமுணுத்துக் கொண்டே சென்றது நமது காதிலும் விழுந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.