TN Cabinet Meeting: கூடுகிறது அமைச்சரவை… பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து முக்கிய முடிவு – எகிறும் எதிர்பார்ப்பு!

Tamil Nadu Cabinet Meeting Today: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 20ஆம்  தேதி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு  ஒப்புதல் அளிக்கப்படும். 

மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் மற்றும் அனுமதி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட மகளிர் உரிமைத் தொகையாக பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை வரும் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்க  திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு வரும் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்ய  உள்ள 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் இன்றைய அமைச்சரவை மற்றும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரே பரபரப்பாக ஆரம்பித்து, பெரும் விவாதத்தை கிளப்பியது. 

அரசு தயாரித்து கொடுத்த உரையில் மாற்றங்கள் செய்து வாசித்ததாக கூறி, ஆளுநர் வாசித்த ஆங்கில உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய கூட்டம் முடிவடைவதற்கு முன்னரே, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது உள்ளிட்ட பரபரப்பான காட்சிகள் அன்று அரங்கேறின. 

தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, சட்டப்பேரவை கூட உள்ளதால் திமுக புத்துணர்ச்சியோடு இருக்கும். மேலும், அதனால்தான், இன்றைய அமைச்சரவை கூட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது. 

மற்றொரு திருப்பமாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, மசோதாவில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளும்படி ஆளுநர் அதனை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிகிறது. எனவே, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.