ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் விதிமீறல்: அதிமுகவினரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சென்னை: பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அதிமுகவின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் உள்பட மூவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறான கருத்துக்களை பரப்புவதற்காக உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் எல்இடி திரையை பயன்படுத்தியது தொடர்பாக, திமுக வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட 21 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தெற்கு மண்டல செயலாளர் எம்.என்.சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் எஸ்.ஆர்.அன்பு ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றியை பொறுக்காமல் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலையின் சந்திப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு” என்று வாதிடப்பட்டது.

அப்போது புகார்தாரரான தமிழ்செல்வன் தரப்பில், “உரிய அனுமதி பெறாமல், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும் எல்இடி திரைகளை வைத்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பில், “21 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் தலைமறைவாக உள்ளனர். எனவே அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது” எனக் கூறி,பொதுக்கூட்டம் நடந்த அன்று காவல் துறை தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் குறுந்தகடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, குறுந்தகட்டை ஆய்வு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெருப்பை கக்கும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைத்தது நிரூபணமாகியுள்ளது. இவை, உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு முரணானது எனக் கூறி, மூவரின் முன்ஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.