பகலில் சாலையில் நடக்கவே அச்சம்… குமரியில் வாட்டி வதைக்கும் வெயில்: குளிர்பான கடைகளில் அலைமோதும் கூட்டம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பகலில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கமாக மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கடந்த மாதம் பிப்ரவரியில் இருந்தே வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் லேசான மழை இருந்தது. தற்போது மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. மார்ச் மாதத்தில் இருந்து வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

காலை 9 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. பகல் 12 மணிக்கெல்லாம் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் சிரமம் அடைகிறார்கள். மேலும் வீடுகளில் பேன், ஏ.சி. இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. வெயிலின் கொடுமை அதிகரித்து உள்ளதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை தேடி செல்கிறார்கள். தாகத்தை தீர்க்க குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கரும்புசாறு, பழச்சாறு, தர்ப்பூசணி மற்றும் பழங்கள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. மோர், கூல்டிரிங் வியாபாரமும் கடைகளில் சூடுபிடித்துள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயில் கொடுமைக்கு உள்ளாகி உள்ளனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள போதிய அளவு குடிநீர் அருந்த வேண்டும் என டாக்டர்கள் கூறி உள்ளனர். சாலையில் நடந்து செல்லும் போது குடைகளை பயன்படுத்த வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் என டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது மார்ச் மாதத்திலேயே ெவயில் கொடுமை அதிகரித்து இருப்பது மக்களுக்கு பெரும் அவதியை உண்டாக்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.