ஜெய்ப்பூர், புல்வாமா தாக்குத லில் உயிரிழந்த ராணு வத்தினரின் குடும்பத் துக்காக போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் மீது, போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து, வன்முறை ஏற்பட்டது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், 2019ல் நம் அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
இதில், நம் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
வலியுறுத்தல்
உயிரிழந்த வீரர்களின் மனைவியருக்கு அரசு வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் மனைவியரான மஞ்சு ஜாட், மதுபாலா மற்றும் சுந்தரி தேவி ஆகிய மூவரும், பிப்., 28 முதல் தங்கள் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் வீட்டு முன் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வீர மரணம் அடைந்த வீரர்களின் மனைவியர் மூவரையும் ராஜஸ்தான் போலீஸ் கைது செய்தது.
இதையடுத்து, பா.ஜ., – எம்.பி., கிரோடிலால் மீனா தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று, முதல்வர் அசோக் கெலாட் இல்லம் நோக்கி பா.ஜ., வினர் பேரணி சென்றனர்.
முதல்வர் வீட்டருகே குவிக்கப்பட்டிருந்த போலீசார், பா.ஜ.,வினரை தடுத்து நிறுத்தினர். அப்போது, கூட்டத்தில் சிலர் மீது கற்கள் விழுந்தன. இதையடுத்து, போலீசார் மீதும் கல் வீச்சு சம்பவம் நடந்தது.
தண்ணீர் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதில், பா.ஜ., – எம்.பி., கிரோடிலால் மீனா பலத்த காயம் அடைந்து, ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நெருக்கடி
இது குறித்து, கிரோடிலால் மீனா கூறியதாவது:
தியாகிகளின் மனைவியர் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை கூற நேரம் கேட்டனர்.
ஆனால், முதல்வர் அதை மறுத்து விட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவோடு இரவாக மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கு வைக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் மறுக்கின்றனர்.
வீர மரணம் அடைந்த வீரர்களின் மனைவியரின் நியாயமான கோரிக்கையை, மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம், ராஜஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்