மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் நலசங்கம் நடத்திய பால் நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆவின் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இன்று மாலை முதல் வழக்கம்போல் பால் கொள்முதல் செய்யப்படும் என பால் உற்பத்தியாளர்கள் நலசங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் நிறுவனமான ஆவின் நிா்வாகம், பால் கொள்முதலுக்கான விலையை உயா்த்த வேண்டும் என்று, பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்தது, மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் சாா்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
போராட்டம் நடைபெறாமல் தடுக்க ஆவின் நிா்வாகம், கடந்த 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் பால் உற்பத்தியாளா்கள் உடன் பேச்சுவாா்த்தை நடத்தியது.
இந்த பேச்சு வார்த்தை உரிய முடிவு எட்டப்படாத நிலையில், இன்று முதல் (மாா்ச் 11) ஆவின் நிறுவனத்துக்கு பால் அனுப்பாமல், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, பால் உற்பத்தியாளா்கள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கங்களின் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கங்களின் சாா்பில் பால் நிறுத்த போராட்டம் தொடக்கி நடைபெற்றது. இந்த போராட்டத்தால் மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு வரக்கூடிய பால் வரத்து குறைந்தது.
இதனையடுத்து, பால் உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மதியமே போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.