“காலக்கோளாறு; ஜாதகக்கோளாறு… அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியுள்ளது”- ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.மு.கவின் அமைப்புச்செயாளர் ஆர்.எஸ்.பாரதி  சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மகளிருக்கு என இலவச பஸ் திட்டம்  செயல்பாட்டில் உள்ளது. பா.ஜ.கவின்அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டிய நிலை உள்ளது. நான் அரசியலுக்கு வந்த போது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திறக்கமாட்டார். காலக்கோளாறு, ஜாதகக் கோளாறு அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலை என்பவர் ஆணாய்ப் பிறந்து வீணாய் போன ஆள்.  என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை, இவர்  எப்படி ஐ.பி.எஸ் ரேங்கில் பாஸ் செய்தார் என்று தெரியவில்லை. அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை.  அ.தி.மு.கவினருக்கு சொரணை இருக்கிறதோ, இல்லையா என்று தெரியவில்லை, ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணமாலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று பார்க்கிறார்.

நாங்கள் இந்திரா காந்தியையே பார்த்தவர்கள், மிசா சட்டத்தை சந்தித்தவர்கள். சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி தி.மு.க என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மகளிருக்கான இலவச பஸ் திட்டத்தினைப் பார்த்து, உத்திரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் எங்களுக்கு வாக்களித்தால் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

இந்தியாவிற்கு வழிகாட்ட கூடிய பலதிட்டங்கள் தி.மு.கவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பா.ஜ.க மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இருவரும் சனாதான ஆட்சி நடத்த வேண்டும், அதுதான் நன்மை எனக் கூறுகிறார்கள். பெண்கள் மேலாடை அணிந்து இருந்தால் வரி, ஆண்கள் தாடி வைத்திருந்தால் வரி என்ற நிலை இருந்தது. இதையெல்லாம் தந்தை பெரியார், நாரயணகுரு, அய்யா வைகுண்டர் போன்றோர் போராடி நீக்கவைத்தனர்.

‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. ஆகையால்தான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் முதல்வர் ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார். திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆரியர்களுக்கு எதிரான ஆட்சி. சீமான் பின்னால் செல்லும் இளைஞர்ளை அழைத்து இதுபோன்ற வரலாறு குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பயங்கரமான ஊழல் நடந்து வருகிறது. அங்கு எல்லாம் ஆளுநர்கள் வாயைப் பொத்தி மௌனமாகவே இருக்கின்றனர்.

பிறந்தநாள் பொதுக்கூட்டம்

ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக ஆளுநர்களின்  செயல்பாடு உள்ளது. ஆனால், தமிழகத்தில் முதல்வர் அதை சமார்த்தியமாக சமாளித்து வருகிறார்.  தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு பெண்கள் முதல்வரை தனது மகனாக, சகோதரனாக பார்த்து வருகின்றனர். பெண்கள் ஒரு கட்சியை ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் 10 ஆண்டுகளுக்கு அந்த ஆட்சி, கட்சியை யாரலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது கடந்த கால வரலாறு” என்றார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.