திருவாரூரில் நீதிமன்றத்துக்கு சென்று விட்டு திரும்பிய பிரபல ரெளடி ஒருவர் எட்டு பேர் கொண்ட மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவில் வரும் காட்சிகளை விஞ்ச கூடிய வகையில் நடந்த இந்த கொலை பழிக்கு பழியாக நடந்திருக்கலாம் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (34). வளரும் தமிழகம் எனும் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸார் வைத்திருக்கும் பிரபல ரெளடி பட்டியலில் ராஜ்குமார் பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்டபஞ்சாயத்து செய்து வந்ததுடன், கூலிப்படைத் தலைவனாகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு ராஜ்குமார் தனது வழக்கறிஞர் உள்ளிட்ட ஐந்து பேருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கமலாபுரத்தில் வழக்கறிஞரை இறக்கி விடுவதற்காக சென்ற போது மன்னார்குடி பகுதியிலிருந்து திருவாரூர் சாலையில் வேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று ராஜ்குமார் சென்ற கார் மீது வேகமாக மோதியது.

இதில் காரின் பின்பகுதியில் உள்ள கதவு லாக்கானதால் பின் சீட்டில் அமர்ந்திருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை. முன் சீட்டில் அமர்ந்திருந்த ராஜ்குமார் காரிலிருந்து இறங்கி வெளியே வந்திருக்கிறார். அப்போது மோதிய காரிலிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கிய எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜ்குமார் நோக்கி சென்றனர்.
இதைப்பார்த்த ராஜ்குமார் தன்னை கொலை செய்வதற்காக ஸ்கெட்ச் போட்டு காரை மோதியுள்ளனர் என்பதை உணர்ந்து தப்பியோடியிருக்கிறார். இதையடுத்து துரத்தி சென்ற கும்பல் ராஜ்குமாரை ஓட ஓட விரட்டி கொலை செய்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் சர்வ சாதாரணமாக இந்த கொலை நடந்ததால் அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறினர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு எஸ்.பி சுரேஷ்குமார், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமார் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். இதனால் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் பதற்றம் நிலவி வருகிறது. வணிகர்கள் கடைகளை அடைத்து விட்டனர். ராஜ்குமார் உடல் எடுத்து வரும் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம், “கடந்த ஆண்டு சி.பி.ஐ கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளரான நடேச தமிழார்வன் என்பவர் நீடாமங்கலம் கடை வீதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.

நடேச தமிழார்வன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக” தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர்கள் சிலரோ, `திருவாரூர் மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சம்வங்கள் பெருகிவிட்டன. கூலிப்படை நகரமாக திருவாரூர் மாறி வருகிறது. கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் வெளி மாவட்ட ரெளடிகளுடன் தொடர்பில் இருந்து கொலை செயவதற்காக கூலிப்படைகளை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
நடேச தமிழார்வனுக்கும், ராஜ்குமாரும் கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தான் தமிழார்வன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் இருக்கிறது. போலீஸ் குடுபிடி காட்டியதால் சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்த பழிக்கு பழி கொலை சம்பவம் தற்போது மீண்டும் நிகழத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. ரெளடி லிஸ்டில் இருப்பவர்களை கைது செய்து உடனடி நடவடிக்கை எடுத்து இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்’ என்றனர்.