கடலூரில் இயங்கிவரும் மத்திய அரசின் `நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி)’, சுரங்க விரிவாக்கத்துக்காக மேற்கொண்டுவரும் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக அந்தப் பகுதியிலுள்ள வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நிலம் கையகப்படுத்தப்பட உள்ள வளையமாதேவி, கீழ்பாதி, கரிவெட்டி, ஊ.ஆதனூர் கிராமங்களின் நுழைவாயில் பகுதியில் போலீஸார் தடுப்புகளை அமைத்து, வெளியூரைச் சேர்ந்தவர்கள். கிராமத்தில் நுழைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனால், கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. என் ஆணைக்கிணங்க கடந்தாண்டு அக்டோபர் மாதம் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், என்.எல்.சி இந்தியா நிறுவனத் தலைவராக இருந்த ராகேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துக்காகக் கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியிருந்தார்.

தற்போது அராஜக முறையில் விளை நிலங்களைக் கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகத்துக்கும், அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கும் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழக காவல்துறையைப் பயன்படுத்தி மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு விளை நிலங்களை அபகரிக்க முயல்வது எந்த வகையில் நியாயம்… மக்களுக்கான திட்டங்களை மட்டுமே மத்திய மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். அதை விடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையில் எந்த ஒரு திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பது தே.மு.தி.க தான். எனவே மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என விஜயகாந்த் வலியுறுத்தியிருக்கிறார்.