சென்னை அம்பத்தூர், பாடி டி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (24 ). ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் பணியாற்றிய நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையால், விக்னேஷின் வேலை பறிபோனது. இதனால், கடந்த ஒரு மாதமாகவே விக்னேஷ் கடும் மன உளைச்சலில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடுமபத்தினர் அம்பத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்

இதையடுத்து, அங்கு வந்த போலீஸார், விக்னேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விக்னேஷின் அறையை போலீஸார் ஆய்வுசெய்தபோது அவர் தற்கொலை செய்தவற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் கிடைத்திருக்கிறது.
அதில், “என்னுடைய முடிவுக்கு வேறு யாரும் காரணமில்லை. மீண்டும் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்பதால் தற்கொலை முடிவை எடுத்தேன். என்னை மன்னித்து, மறந்துவிட வேண்டும். ‘அம்மா நான் போறேன்… உடம்பைப் பார்த்துக்க’’ என்று அந்த கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தாக போலீஸார் தெரிவித்தனர். அத்துடன் தன் ஏ.டி.எம் கார்டு, செல்போன் பார்ஸ்வேர்டுகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விக்னேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.