தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மின்விபத்தில் தாயை இழந்து ஏற்கெனவே 2 யானைக் குட்டிகள் தவித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு யானைக்குட்டி தாயைப் பிரிந்து தவித்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்ட அள்ளி அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை தடுக்க முருகேசன் என்ற விவசாயி தன் நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். கடந்த 7-ம் தேதி அதிகாலை அவ்வழியே சென்ற 1 ஆண் மற்றும் 2 பெண் யானைகள் இந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தன. அதேநேரம், இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தன.
முறையே 2 மற்றும் 1 வயதுடைய இவ்விரு குட்டிகளும் தாய் யானைகளை இழந்த சோகத்துடன் அதே பகுதியில் நடமாடி வருகின்றன. இந்த குட்டிகளை பாதுகாத்து அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் கால்நடை மருத்துவர்களுடன் வனத்துறை குழுவினர் முகாமிட்டு யானைக் குட்டிகளை கடந்த 5 நாட்களாக கண்காணித்து, வருகின்றனர். மேலும், அந்த யானைக் குட்டிகளை இயல்பான வாழ்விட சூழலில் சேர்ப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்தும், திட்டமிட்டும் வருகின்றனர்.
இந்த 2 யானைக்குட்டிகளும் தவித்து வரும் நிலையில் தருமபுரி மாவட்டத்திலேயே மேலும் ஒரு யானைக்குட்டி தாயைப் பிரிந்து தவித்து வருகிறது. பென்னாகரம் வட்டம் பென்னாகரம் வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. தனித்தனிக் குழுக்களாக உலா வரும் இந்த யானைகள் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த சுமார் 1 வயதுடைய யானைக் குட்டி ஒன்று சில நாட்களுக்கு முன்பு குழுவில் இருந்து தனியாக பிரிந்துள்ளது. இதையறிந்த வனத்துறையினர், யானைகள் அதிகம் நடமாடும் பகுதியில் அந்த குட்டியை கொண்டு சென்று விட்டுள்ளனர்.
இருப்பினும், தனது தாய் இடம்பெற்றுள்ள குழுவை அந்தக் குட்டியால் கண்டறிந்து சேர்ந்து கொள்ள முடியாத சூழல் நிலவியுள்ளது. இவ்வாறு தவித்து வந்த அந்தக் குட்டி வனத்தையொட்டிய நீர்க்குந்தி கிராம பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது. அப்போது விவசாய நிலம் ஒன்றில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறை குழுவினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் அந்த குட்டியை கயிறு கட்டி இன்று(11-ம் தேதி) மீட்டனர்.
மீட்கப்பட்ட யானைக் குட்டி போடூர் அடுத்த சின்னாற்றுப் படுகை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவின்பேரில் அந்த யானைக் குட்டிக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. வனத்துறைக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அந்தக் குட்டிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்து தவித்து வரும் இந்த யானைக் குட்டியையும் விரைந்து தாய் யானையுடன் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட வனத்துறை பணியாளர்களுக்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.