திருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் வழிதவறிய 4 புலிக்குட்டிகள் திருப்பதி உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.
ஆந்திராவின் கர்னூல் அருகே உள்ள நந்தியாலா மாவட்டம், பெத்த கும்மிடாபுரம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு முள்புதரில் 4 பெண் புலிக்குட்டிகள் இருப்பதை கிராம மக்கள் பார்த்தனர். அவற்றை மீட்டு ஆத்மகூர் வன அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தாயிடம் இருந்து வழிதவறிய புலிக்குட்டிகளை மீண்டும் தாயிடம் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா மூலம் புலிக்குட்டிகளின் தாயை கண்டறிய முயன்றனர். அப்போது டி-108 எண் கொண்ட பெண் புலி அந்த குட்டிகளை ஈன்றது தெரிய வந்தது. அந்த தாய் புலி, குட்டி புலிகளை விட்டு சென்ற இடத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் உலாவுவது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து 2 நாட்கள் புலிக்குட்டிகளை அப்பகுதியில் உலாவ விட்டு வனத்துறையினர் கண்காணித்தனர். ஆனால், தாய்ப் புலி வரவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று நந்தியாலத்தில் இருந்து 4 புலிக்குட்டிகளையும் வேனில் ஏற்றி திருப்பதி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். சில நாட்கள் கழித்து 4 புலிக்குட்டிகளை மீண்டும் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்ல வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.