மக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது: அன்புமணி 

சென்னை: கடலூர் மாவட்டத்தில் மக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் 40 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் 100% இயக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல இடங்களில் கான்வாய் முறையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 10 எஸ்பிக்கள் தலைமையில் 7,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு பிரச்சினை கடலூர் மாவட்டத்தில் உள்ளது. 8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் என்எல்சி காரணமாக 1,000 அடிக்குக் கீழே சென்று விட்டது. இது வெறும் 15 கிராமங்களின் பிரச்சினை அல்ல. 5 மாவட்ட மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.

என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தி மக்களை அவதிக்கு உள்ளாக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. முழு அடைப்பு போராட்டத்தின் நோக்கத்தை வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் உணர்ந்துள்ளதால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றைய கடையடைப்பு அடையாள போராட்டமே. இனி தீவிரமாக போராட்டங்களை முன்எடுப்போம்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.