புதுடெல்லி: லாலு குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.600 கோடிக்கான நில மோசடி ஆவணங்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரயில்வே வேலை மோசடி வழக்கு குறித்து அமலாக்கத்துறை டெல்லி, பாட்னா, ராஞ்சி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 24 இடங்களில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தியது. இதில், லாலு குடும்பத்தினர் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரொக்கம் ரூ.1 கோடி பணம், சுமார் ரூ.1.25 கோடி மதிப்பிலான 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் 1.5 கிலோ தங்க நகைகள், 1,900 அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லாலு குடும்பத்தினர் மற்றும் அவர்களது பினாமிகள் பெயர்களில் உள்ள பல்வேறு சொத்து ஆவணங்கள், விற்பனைப் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நில மோசடி ஆவணங்கள், மின்னணு சாதனங்களை சட்டவிரோதமாக குவித்து வைத்ததும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.600 கோடிக்கான நில மோசடி குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ரூ.350 கோடி அசையா சொத்துக்களாகவும், ரூ.250 கோடி பினாமிகள் மூலம் பண பரிவர்த்தனை வடிவிலும் உள்ளன.
குறிப்பாக, தேஜஸ்வி யாதவ் வசிக்கும் தெற்கு டெல்லி, நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள வீடு, ‘ஏபி எக்ஸ்போர்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தேஜஸ்வி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானது. இந்த வீடு ரூ.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டதாக ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.150 கோடி. ஏபி எக்ஸ்போர்ட், ஏகே இன்போசிஸ்டம் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக பதிவு செய்யப்பட்ட இந்த வீட்டில் தேஜஸ்வி தங்கியிருந்து, தனது சொத்தாகப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வேயில் குரூப்-டி வேலை வாங்கித் தர சில ஏழைகளிடம் இருந்து வெறும் ரூ.7.5 லட்சத்திற்கு லாலு குடும்பத்தினர் வாங்கிய நான்கு நிலங்களை ரப்ரி தேவி, தனது சொந்த கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சையத் அபு டோஜானாவுக்கு ரூ.3.5 கோடிக்கு விற்றுள்ளார். இதில் பெரும் தொகை தேஜஸ்வி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போல பல பேரிடம் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சராக லாலு இருந்த சமயத்தில், பல ரயில்வே மண்டலங்களில் குரூப்-டி பணியில் சேர்க்கப்பட்டவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் லாலு குடும்பத்தினரின் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நில மோசடி தொடர்பான விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* சிறப்பு அரசு வக்கீல் ராணா ராஜினாமா
அமலாக்கத்துறையின் சிறப்பு அரசு வக்கீலாக கடந்த 2015ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த நிதேஷ் ராணா தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று ராஜினாமா செய்தார். இவர், காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார், லாலு மற்றும் அவரது குடும்பத்தினர், சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோருக்கு எதிரான வழக்குகள் உட்பட பல உயர்மட்ட வழக்குகளில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகி வாதாடியுள்ளார். மேலும், ஏர் இந்தியா ஊழல், விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் மோசடி வழக்குகளிலும் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடியவர்.